Wednesday 8 January 2020

புதிய அமைப்பு தொடங்கினார் ஏ.ஆர்.ரஹ்மான்

2 ஆஸ்கர் விருதுகளை பெற்றதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கு இசை அமைத்தாலும் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று தமிழ் படங்களுக்கு இசை அமைக்கிறார். ரஹ்மான் அவ்வப்போது ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார். உலகின் பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சியும் நடத்துகிறார். சென்னையில் உலகத்தரம் வாய்ந்த ரிக்கார்டிங் ஸ்டூடியோவும் கட்டியிருக்கிறார். அதோடு பல இசைப் பள்ளிகளையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.


இந்த நிலையில் தற்போது தா ப்யூச்சர் என்ற புதிய அமைப்பை தொடங்கியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழ் பண்பாடு கலாச்சாரத்தை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக இந்த அமைப்பை தொடங்கியுள்ளேன். இயக்குனர் பரத்பாலாவும் எம்.ஐ.டி கல்லூரியும் என்னோடு இணைந்திருக்கிறார்கள்.

இன்றைய குழந்தைகள் யு-டியூப்பிலேயே எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறார்கள். எனவே அவர்களுக்கு பிடித்த யு-டியூப் வழியாகவே நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் நல்ல ஒழுக்கத்தையும் கற்றுத் தருவது தான் இந்த அமைப்பின் நோக்கமாகும். இதில் யார் வேண்டுமானாலும் யுடியூப் வழியாக இணைந்து பணியாற்றலாம்.

இவ்வாறு ரஹ்மான் கூறினார்.

No comments:

Post a Comment